நிதிநிறுவன தொழிலில் நஷ்டம்: நண்பர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


நிதிநிறுவன தொழிலில் நஷ்டம்: நண்பர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2018 10:00 PM GMT (Updated: 1 Oct 2018 8:47 PM GMT)

மயிலாடுதுறை அருகே நிதி நிறுவன தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நண்பர்கள் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மயிலாடுதுறை, 


நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள காமராஜர் சாலையை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). இவருடைய நண்பர் சந்திரசேகரன்(45). நண்பர்களான இவர்கள் நிதி நிறுவனம் மற்றும் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த சரவணனும், சந்திரசேகரனும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று சரவணன், சந்திரசேகரன் ஆகிய இருவரும் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கடைக்கு சென்று நைலான் கயிறு வாங்கி வந்தனர். பின்னர் இரவு சுமார் 7.30 மணி அளவில் இருவரும் தங்களது வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள அறையின் கதவை பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சரவணன் மற்றும் சந்திரசேகரன் வீடுகளுக்கு சென்று இருவருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நண்பர்கள் இருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் மயிலாடுதுறை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story