அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதல்: வேன் டிரைவர் பலி; 9 பேர் படுகாயம்


அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதல்: வேன் டிரைவர் பலி; 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Oct 2018 9:30 PM GMT (Updated: 1 Oct 2018 9:23 PM GMT)

வேளாங்கண்ணி அருகே அரசு பஸ் மீது சரக்கு வேன் மோதியதில் வேன் டிரைவர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேளாங்கண்ணி, 

நாகையை அடுத்த பனங்குடி ஏரிமேட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அருள்பாண்டி(வயது 23). சரக்கு வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகையை நோக்கி சரக்கு வேன் ஓட்டி சென்றார். கருவேலங்கடை அருகே சென்று கொண்டிருந்தபோது வேனுக்கு முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரில் நாகையில் இருந்த வேதாரண்யம் நோக்கி வந்த அரசு பஸ் மீது அருள்பாண்டி ஓட்டிச்சென்ற வேன் பயங்கரமாக மோதியது.

இதனால் பின்னால் வந்த கார், சரக்கு வேன் மீது மோதியது. இந்த விபத்தில் அருள்பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அருள்பாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காரில் வந்த திட்டச்சேரி முடுக்கு தெருவை சேர்ந்த அப்துல் ஹாஜி(52), அதே பகுதியை சேர்ந்த ஜீனத் நிஷா(50), உமர்முக்தர் மனைவி நூர் பர்ஜானா(28), இவர்களது மகள் நூர் ஹனிசா(5), நூர் ஷடிஷா(3) மற்றும் அப்துல் பத்தாக் மகள் உமேராபானு ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் நாகையில் இருந்து வேதாரண்யம் சென்ற அரசு பஸ்சில் பயணம் செய்த சின்னதும்பூரை சேர்ந்த இளங்கோவன் மகள் சவுந்தர்யா(21), நாகை செம்மாரகடை வடக்கு தெருவை சேர்ந்த வசந்தா(67), விழுந்தமாவடி மீனவர் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி ராணி(32) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 9 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story