மணல் அள்ள எதிர்ப்பு: மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


மணல் அள்ள எதிர்ப்பு: மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2018 10:39 PM GMT (Updated: 1 Oct 2018 10:39 PM GMT)

குடியாத்தம் அருகே பட்டு பாலாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த பட்டு கிராமத்தை ஒட்டியபடி பாலாறு உள்ளது. இந்த பாலாற்றில் இருந்து லாரிகள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தல் நடைபெற்று வந்தது. வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் மணல் கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காமல் பொதுமக்களும், தொழிலாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பட்டு பாலாற்று பகுதியில் மணல்குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் பட்டு பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியாத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் தினமும் மணல் அள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலையில் மணல் குவாரி இயங்கக்கூடாது என்றும், இங்கிருந்து மணல் எடுத்து செல்லக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மணல் குவாரிகளில் மணல் எடுக்க வந்த 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

தினமும் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தனர். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பதால் நிலத்தடி நீராதாரம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நிலத்தடி நீரும் உப்பாக மாறி வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் தினமும் வந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மணல் குவாரியை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டுகள் ஜெயக்குமார், அரிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து முற்றுகையிடப்பட்ட மாட்டு வண்டிகள் இன்று மட்டும் மணல் எடுத்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story