காட்பாடி அருகே மணல்குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - கோரிக்கை மனு


காட்பாடி அருகே மணல்குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் - கோரிக்கை மனு
x
தினத்தந்தி 1 Oct 2018 10:53 PM GMT (Updated: 1 Oct 2018 10:53 PM GMT)

காட்பாடி அருகே மணல்குவாரி அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

பெற்றப்பட்ட 489 மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அப்போது காட்பாடியை அடுத்த தேன்பள்ளி அருகே உள்ள ஸ்ரீபாதநெல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நாங்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக பொன்னை ஆற்றையே நம்பி உள்ளோம். குகையனூர், தேன்பள்ளி உள்ளிட்ட கிராம மக்களும் இந்த ஆற்றையே நம்பி வாழ்கின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் உள்ள பொன்னை ஆற்றில் மணல் குவாரி அமைக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மணல் குவாரி அமைத்தால் இந்தப் பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போகும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் பொன்னை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

பாணாவரம் நெமிலி ரோட்டை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் கொடுத்த மனுவில், எனது வீட்டுக்கு முன்னால் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் நாடகத்துக்காக நிரந்தரமாக சிமெண்டால் நாடக மேடையை சிலர் அமைத்துள்ளனர். இதனால் எங்களுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு புகார் கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சிமெண்டு நாடக மேடையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்போம், எனத் தெரிவித்துள்ளார்.

கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஆட்டோ ஓட்டும் தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். 10 வருடங்களுக்கு முன்பு சந்தேகத்தின்பேரில் போலீசார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறை கைதிகளுடன் பழக்கம் ஏற்பட்டதால் போலீசார் கொலை, கொள்ளை போன்ற பொய் வழக்குகளில் என்னை தொடர்புப்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைத்தனர்.

என் குழந்தைகள் மீது கொண்ட பாசத்தால் நான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன். மேலும் நீதிமன்றத்தில் என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்குச் சரியாக அனைத்து வாய்தாக்களுக்கும் ஆஜராவேன். குற்றவாளிகளுடன் எந்தவொரு தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு) பேபிஇந்திரா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story