குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விஜயபுரம்-திடீர்குப்பம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விஜயபுரம்-திடீர்குப்பம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 1 Oct 2018 10:57 PM GMT (Updated: 1 Oct 2018 10:57 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி விஜயபுரம்-திடீர் குப்பம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வேப்பந்தட்டை தாலுகா தொண்டாமாந்துறை ஊராட்சிக்குட்பட்ட விஜயபுரம், திடீர் குப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கிராமங்களில் குடிநீர் பிரச்சினை குறித்து மனு கொடுக்க திரண்டு வந்தனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்தந்த கிராமங்களில் இருந்து தலா 5 பேரை மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுமதித்தனர். அவர்களில் விஜயபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், விஜயபுரம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. தற்போது தெரு குழாய்களுக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் வருகிறது.

அதுவும் ஒரு குடும்பத்திற்கு 2 அல்லது 3 குடம் அளவுக்கு குடிநீர் கிடைக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பல முறை மனு கொடுத்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த பாடில்லை. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றோம். மேலும் குடிநீர் காசு கொடுத்து வாங்கி குடிக்கின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எங்களது கிராமத்தில் உள்ள 3 ஆழ்குழாய் கிணறுகள் பழுதாகி உள்ளதால், அதனை சீரமைக்க வேண்டும். எங்கள் கிராமத்தின் அருகே உள்ள தொண்டாமாந்துறைக்கு வரும் காவிரி நீரை விஜயபுரத்திற்கு வழங்க வேண்டும். காவிரி நீர் எங்கள் கிராமத்திற்கு கொண்டு வர குழாய் வசதி இருப்பதால், உடனடியாக அதன் வழியாக காவிரி நீரை எங்கள் கிராமத்திற்கு வினியோகிக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதே போல் திடீர்குப்பம் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. மேலும் தெரு குழாயில் வரும் குடிநீர் மிகவும் குறைவாக வருகிறது. கிராமத்தில் உள்ள ஒரு ஆழ்குழாய் கிணறும் பழுதாகி உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா வடக்கு மாதவி ஏரிக்கரையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஏரிக்கரை தெற்கு தெருவில் குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லை. எனவே அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story