நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு


நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Oct 2018 10:00 PM GMT (Updated: 1 Oct 2018 11:06 PM GMT)

நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது திடீரென போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 


நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

இந்தநிலையில் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஒரு நிதி நிறுவனத்தில் முகவர்களாக செயல்பட்டவர்கள், பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் என ஏராளமான ஆண்கள், பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். முதலீடு செய்த பணத்தை நிதி நிறுவனத்திடம் இருந்து திரும்ப பெற்று தரக்கோரி அச்சிடப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இங்கு போராட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்த நிறுவனம் ஒரு அரசு அதிகாரம் பெற்ற நிறுவனம் என்று அரசு சான்றுகளை காண்பித்தும், 63 மாத தவணையில் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கட்டினால் 800 சதுர அடி நிலம் தரப்படும், நிலம் வேண்டாம் என்றால் 12½ சதவீத வட்டியுடன் பணம் தரப்படும் என்றும் பல ஆசை வார்த்தைகளை கூறி எங்களையும், எங்கள் மூலமாக பலரையும் முகவர்களாக சேர்த்து செயல்பட வைத்தனர். பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை 49 பங்குதாரர்கள் மூலம் நிறுவனத்தில் கட்டி வந்தோம். கடந்த 4 ஆண்டுகளாக பல லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதனால் நிறுவனத்தின் முகவர்களும் பல நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நெருக்கடிகளையும், அவமானங்களையும் தாங்க முடியாமல் இதுவரை 21 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முகவர்களும் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டிடம் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க செயலாளர் மலைவிளை பாசி தலைமையில் ஏராளமானோர் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கல்குளம் தாலுகா கோதநல்லூர் வருவாய் கிராமம் முட்டைக்காடு குருசடி, வலியவிளை, புத்தன்சாலை இடதுகரையில் குடியிருக்கும் பயனாளிகளை காலி செய்ய பொதுப்பணித்துறை முயற்சிக்கிறது. மிகவும் ஏழை மக்களாகிய அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அவர்களுக்கு எந்தவித சொத்தோ, வருவாயோ இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் மேசியா கொடுத்துள்ள மனுவில், “பனை மரம் குமரி மாவட்டத்தில் அழிந்து வருகிறது. அதை பாதுகாத்து, பனை மரத்தை வளர்க்க சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

விளவங்கோடு தாலுகா விளாத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மனைவி ஜெயசந்திரா (வயது 28). இவர்கள் குடும்பத்தோடு தற்போது பூதப்பாண்டி அருகே முக்கடல் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெயசந்திரா நேற்று தனது குழந்தைகள் மற்றும் உறவினருடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

முக்கடல் பகுதியில் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலை சேர்ந்த ஒருவர் தோட்ட வேலைக்காக அமர்த்தினார். இந்தநிலையில் சம்பள பாக்கி தராமல் எங்களை முக்கடல் பகுதியில் இருந்து விரட்ட நினைத்தார். அந்த சமயத்தில் நான் பிரசவத்துக்காக சென்றிருந்த நேரத்தில், எங்களுடைய வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் என் கணவர் மீதும் பொய் புகார் கொடுத்துள்ளனர். நான் பிரசவம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது கதவு, ஜன்னல்கள், மேற்கூரை ஓடுகள் ஆகியவற்றை எங்களை வேலைக்கு அமர்த்தியவர் கூறியதின் பேரில் சிலர் உடைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது சம்பள பாக்கியை பெற்று தர வேண்டும். வீட்டையும் சரி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரீத்தாபுரம் பேரூராட்சி இரும்பிலி நெசவாளர் தெருவை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் “ரீத்தாபுரம் பேரூராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட இரும்பிலி நெசவாளர் தெருவில் சுமார் 20 குடும்பங்கள் பொதுவழிப்பாதை இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே கலெக்டர் பார்வையிட்டு எங்கள் அவலநிலையை அறிந்து பொது வழிப்பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்“ என்று கூறியுள்ளனர்.

இதேபோல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் பலர் தனித்தனியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “வாழையத்துவயல் பகுதியில் உள்ள 100 ஏக்கர் அரசு நிலத்தில் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா தரவேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story