தஞ்சையில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் 6 பவுன் நகை திருட்டு


தஞ்சையில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் 6 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 2 Oct 2018 3:30 AM IST (Updated: 2 Oct 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் ஓடும் பஸ்சில் பயணிகளிடம் 2 பவுன் சங்கிலி-4 பவுன் காசு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,


தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் வசந்தி(வயது32). இவர் நேற்றுமுன்தினம் கரந்தையில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது இவரிடம் இருந்த கைப்பையை வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதை பார்த்த பயணிகள் அந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் தஞ்சை மானம்புச்சாவடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சுகில்குமார் மகன் அஜய்குமார்(19) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கைப்பையை பறிமுதல் செய்து வசந்தியிடம் ஒப்படைத்தனர். உடனே கைப்பையை திறந்து அவர் பார்த்தபோது, அதனுள் 2 பவுன் சங்கிலி இருந்தது. இதனால் அவர் நிம்மதி அடைந்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை நடராஜபுரம் தெற்குகாலனியை சேர்ந்தவர் சரவணகுமார்(42). இவர் மங்களபுரத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் வைத்திருந்த மணிபர்சை வாலிபர் திருடியபோது, அவரை பயணிகள் கையும், களவுமாக பிடித்து மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் தஞ்சை கீழவாசல் வண்டிப்பேட்டையை சேர்ந்த சிம்சன் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மணிபர்சை பறிமுதல் செய்து சரவண குமாரிடம் ஒப்படைத்தனர். அதில் 4 பவுன் காசு இருந்தது. 

Next Story