மோசமாக நிலையில் இருந்ததால் மாகி பஸ்சை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
மோசமான நிலையில் இருந்ததால் மாகி பஸ்சை சிறைபிடித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகம் சார்பில் புதுவையில் இருந்து மாகிக்கு தினமும் பஸ் இயக்கப்படுகிறது. அந்த பஸ் பராமரிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக மாற்று பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று மாலை 5.30 மணிக்கு புதுவை பஸ் நிலையத்தில் இருந்து மாகிக்கு பஸ் புறப்பட தயாராக இருந்தது. அந்த பஸ் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நகர மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் பலர் புதுவை பஸ்நிலையத்திற்கு வந்து அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தொலைதூரம் செல்லும் பஸ்களை தரமான பஸ்களாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்க திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் அரசு சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் குமார், பொது மேலாளர் ஏழுமலை மற்றும் அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம், நெடுந்தொலைவுக்கு செல்லும் பஸ் மிகவும் மோசமாக உள்ளது. அதில் எந்த வசதியும் இல்லை. வழக்கமாக செல்லும் பஸ் பராமரிப்புக்கு சென்றிருந்தால் அதற்கு பதிலாக தரமான பஸ்சை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது அதிகாரிகள் பஸ் பராமரிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து அதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அனுமதி கிடைத்துவிடும். அதன் பின்னர் அந்த பஸ் இயக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாலை 5.30 மணிக்கு மாகிக்கு புறப்பட வேண்டிய பஸ் 1 மணி நேரம் தாமதமாக புதுவையில் இருந்து புறப்பட்டு சென்றது.