பாம்பாறு அணை பகுதியில் புதிய இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும் விவசாயிகள் மனு


பாம்பாறு அணை பகுதியில் புதிய இணைப்பு கால்வாய் அமைக்க வேண்டும் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 2 Oct 2018 5:37 AM IST (Updated: 2 Oct 2018 5:37 AM IST)
t-max-icont-min-icon

பாம்பாறு அணை பகுதியில் தென்பெண்ணையாற்று நீரை பாசனத்திற்கு பயன்படுத்த புதிய இணைப்பு கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்கள்.

இந்தகூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், அரூர் தாலுகா வேடகட்டமடுவு ஊராட்சி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு புதிய கால்வாய் அமைத்து ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள பாம்பாறு அணை கால்வாயுடன் இணைத்து தென்பெண்ணையாற்று நீரை பாசனத்திற்கு வழங்கும் கோரிக்கை தொடர்பாக வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது.

மேற்படி கால்வாய் அமைக்கும் இடத்தை சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு அளவீடு செய்து அந்த பகுதி வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது. எனவே எங்கள் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய இணைப்பு கால்வாய் அமைப்பது தொடர்பாக கலெக்டர், மாவட்ட அளவில் ஒரு முத்தரப்பு கூட்டத்தை நடத்தி எங்களுக்கு உரிய தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராம ஊராட்சிகளிலும் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு நிர்ணயப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சுங்கரஅள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் திரண்டு வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலமாக எங்கள் ஊரில் விளையாட்டு மைதானம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிராம விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து போட்டியை மட்டும் நடத்தி முடித்து விட்டனர். பிற போட்டிகளை முறையாக நடத்தவில்லை. சுங்கரஅள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். கடத்தூரை சேர்ந்த கண்பார்வையற்ற தம்பதியான முத்துப்பாண்டி, நஞ்சம்மாள் ஆகியோர் தங்கள் 2 குழந்தைகளுடன் வந்து கொடுத்த கோரிக்கை மனுவில், மாற்றுத்திறனாளிகளான நாங்கள் கடத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனை கோரி 8 முறை மனுக்கள் அளித்துள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டுனை வழங்கி உதவ வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி அப்துல் முஜீப் தெருவை சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் குடியிருப்பு பகுதியில் தேவாலயம், மசூதி மற்றும் மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இடத்தின் அருகே மதுக்கடை செயல்படுகிறது. சாலையில் நின்று கொண்டே பலர் மதுஅருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதால் பெண்கள், மாணவிகள் நடமாட முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே இங்குள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர்.
1 More update

Next Story