அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Oct 2018 10:30 PM GMT (Updated: 2 Oct 2018 4:55 PM GMT)

கிளாம்பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. காலை 11 மணி வரை அதிகாரிகள் யாரும் இதில் கலந்து கொள்ள வரவில்லை. அதனைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் சதீஷ்குமார் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். அவருடன் அரசு அலுவலர்கள் யாரும் பங்கேற்க வில்லை. அப்போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டம் நடப்பதாக யாருக்கும் முறையான அறிவிப்பு தெரிவிக்கப்பட வில்லை. அவ்வாறு அனைவருக்கும் தெரிவித்து இருந்தால் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருப்பார்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதி இல்லை என கூறினர்.

தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இளைஞர்களுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை எடுத்து சென்று விட்டார்கள் அதனை மீண்டும் கொண்டு வந்து அதே இடத்தில் வைக்க வேண்டும், கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தை சிலர் ஆக்கிரமித்து அந்த இடத்தை வாடகைக்கு விட்டு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த கட்டிடத்தை மீட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலையும், வேலைக்கு ஏற்ற நியாயமான கூலியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஜெயபால், மாநில மகளிரணி துணை தலைவர் திவிஜாகுமாரி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் சிவக்குமார், தி.மு.க. இளைஞரணி செயலாளர் மூர்த்தி என திரளான பொதுமக்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைளை ஊராட்சி செயலாளரிடம் அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றார்கள்.

Next Story