கல்பாக்கம் அருகே கார் மோதி தொழிலாளி சாவு


கல்பாக்கம் அருகே கார் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 3 Oct 2018 3:30 AM IST (Updated: 2 Oct 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் சின்ன காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 69). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிக்சை பலனின்றி அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காஞ்சீபுரத்தை அடுத்த கரூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (36). இவர் சென்னையில் இருந்து, காஞ்சீபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த கோனேரிகுப்பம் என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லோகநாதன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மனைவி சரோஜா (75). மூதாட்டியான சரோஜா கீழம்பி - காஞ்சீபுரம் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் சரோஜா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Next Story