சிதம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்சில் மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவர்– கண்டக்டர் கைது


சிதம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பஸ்சில் மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவர்– கண்டக்டர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2018 5:30 AM IST (Updated: 2 Oct 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் வந்த அரசு பஸ்சில் மதுபாட்டில்களை கடத்தி வந்த டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம்,

சிதம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு காரைக்கால் வழியாக வரும் அரசு பஸ்சில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிதம்பரத்தில் இருந்து ராமநாதபுரம் வந்த அரசு பஸ்சினை கண்காணித்தபோது அதன் கண்டக்டர் பரமக்குடி செய்யலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) என்பவர் பஸ்சில் இருந்து மதுபாட்டில் வைத்திருந்த பெட்டிகளை இறக்கி கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர். பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 53 மதுபாட்டில்கள் இருந்தது. சிதம்பரத்தில் இருந்து வரும்போது காரைக்காலில் பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை வாங்கி கடத்தி வந்தது தெரிந்தது.

கண்டக்டரிடம் நடத்திய விசாரணையில் செய்யலூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதாகவும், விழாவில் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவதற்காக பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை காரைக்காலில் இருந்து வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார். வெளிமாநில மதுபாட்டிலை அரசு பஸ்சில் கடத்தி வர பஸ் டிரைவர் சல்மான்கான் (41) உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது கள்ளத்தனமாக வெளிமாநில மதுபாட்டிலை கடத்தி வந்ததாக வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ்சில் டிரைவர், கண்டக்டர் மதுபாட்டில்களுடன் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து ராமநாதபுரத்திற்கு வரும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படும் என்று மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தெரிவித்தார்.


Next Story