தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது


தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 2 Oct 2018 10:00 PM GMT (Updated: 2 Oct 2018 6:43 PM GMT)

சேலம் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம், 


சேலம் சகாதேவபுரம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், சேலம் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆகியவை இணைந்து நடத்திய தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், மாசில்லா தமிழகத்தை உருவாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை இந்தியா இயக்கம் என்பது அரசு செயல்படுத்தும் திட்டம் என்று இல்லாமல் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடைய பங்களிப்பு இருக்கும் வகையில் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் தெரிவித்துள்ளார். காந்தியடிகளின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் சேலம் மாவட்டத்தில் தூய்மை சேவை மற்றும் தூய்மை இந்தியா திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்தியாவை அசுத்தத்தில் இருந்து மீட்டு கொண்டுவர மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று தன் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். தெருக்களில் குப்பைகளை போடாமல், குப்பை தொட்டிகளில் போடவேண்டும். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நோய் பரவுகிறது. நோய் தாக்கியவர்களுக்கு எந்த விதமான ஊட்டச்சத்து கொடுத்தாலும், ஆரோக்கியமாக வாழமுடியாது. சேலம் மாவட்டத்தை சுகாதாரமான மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த ஊர்வலத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story