ஆதிவாசி குடும்பங்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்


ஆதிவாசி குடும்பங்களுக்கு நிலம், வீடு வழங்க வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 Oct 2018 10:45 PM GMT (Updated: 2 Oct 2018 6:53 PM GMT)

முதுமலையில் இருந்து வெளியேற்றப்படும் ஆதிவாசி குடும்பங்களுக்கு பணம் வழங்காமல் நிலம், வீடு வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பிரேமா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசி மக்கள் கூறும்போது, முதுமலை ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே மாற்றிடம் வழங்கும் திட்டத்தை விரைவாக நிறைவேற்றி மக்களை முழுவதுமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ.10 லட்சம் பெற்று வெளியேறிய ஆதிவாசி குடும்பங்களுக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி சிலர் ஏமாற்றி வருகின்றனர். எனவே பணத்துக்கு பதிலாக போஸ்பாரா பகுதியில் நிலம், வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆதிவாசி மக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

ஸ்ரீமதுரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜ் தலைமை தாங்கினார். இதில் காசநோய் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் இலவச ஆடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் 114 பயனாளிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அப்போது தகுதி உள்ள பயனாளிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பின்னர் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி சி.கே.மணி பேசியதாவது:–

தேன்கொல்லி, குண்டித்தாள், ஏச்சம்வயல் உள்பட பல கிராமங்களில் ஆதிவாசி மக்களுக்கு 56 தொகுப்பு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போதிய லாபம் கிடைக்காததால், கட்டிட ஒப்பந்ததாரர்கள் யாரும் டெண்டர்கள் எடுக்க முன்வருவது இல்லை. எனவே இந்த விவகாரத்தில் அதிகாரிகள் கவனம் செலுத்தி ஆதிவாசி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கொரவயல், குண்டூர் உள்பட பல கிராமங்களில் ஆதிவாசி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கவில்லை. ஊராட்சியில் உள்ள சாலையோரம் புற்கள் வளராமல் இருக்க ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இந்த புற்களை கால்நடைகள் தின்று வருவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருந்தகத்துக்கு டாக்டர் வந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மண்வயல்– குண்டித்தாள், கொரவயல்– அம்பலமூலா செல்லும் சாலைகளை சீரமைக்க வேண்டும், ஊராட்சி முழுவதும் தெருவிளக்குகள் எரியாமல் கிடக்கிறது, எனவே வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

கோத்தகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நெடுகுளா ஊராட்சி குட்டிமணி நகர் சமுதாய கூட்டத்தில் நடந்த கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜனார்தனன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் சாலைவசதி, குடிநீர் தேக்கத்தொட்டி வேண்டி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஓழிப்பு, குடிநீர் சிக்கனம், தனிநபர் கழிப்பிட அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story