மது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; பா.ஜனதா பிரமுகரை போலீஸ் தேடுகிறது

மது விருந்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பாரதீய ஜனதா பிரமுகரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பேரூர்,
கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரு டைய மகன் நாகராஜ் (வயது 21). இவர் சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார்.
இவர், கடந்த 30–ந் தேதி ஆலாந்துறை அருகே ஞானபதிகார தோட்டத்தில் நடந்த கிடா வெட்டு விருந்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது, விநாயகர் சதுர்த்திக்காக வசூல் செய்த தொகை குறித்தும் பேசியுள்ளனர். இதனால் பாரதீய ஜனதா இளைஞர் அணி செயலாளர் கந்தசாமி என்ற குட்டி என்பவருக்கும், நாகராஜுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து நாகராஜின் வயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக கோவை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நாகராஜை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவான கந்தசாமி என்கிற குட்டியை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் துடியலூர் மற்றும் ஆலாந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






