தொலைத்தொடர்பு துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாநில மாநாட்டில் தீர்மானம்


தொலைத்தொடர்பு துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாநில மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 Oct 2018 11:00 PM GMT (Updated: 2 Oct 2018 7:45 PM GMT)

தொலைதொடர்பு துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்,

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில மாநாடு நேற்று முன்தினம் திருப்பூரில் தொடங்கியது. நிறைவுநாள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி திருப்பூர் பி.எஸ்.என்.எல். மெயின் தொலைபேசி நிலையம் முன்பு இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் செல்லப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் ரெயில் நிலையம், ஊத்துக்குளி ரோடு வழியாக மாநாடு நடந்த ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது.

பின்னர் அங்கு பொதுமாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க உதவி பொதுச்செயலாளர் செல்லப்பா, சி.ஐ.டி.யு. மாநில உதவி தலைவர் விஜயன் உள்பட தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் பேசினார்கள்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

10 ஆண்டுகள் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் பணித்தன்மைக்கு ஏற்ற ஊதியத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும் நிர்வாகத்தையும், அதற்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது. கேரள மாநிலத்தை போல் சம்பளத்துடன் பண்டிகை விடுமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச போனஸ் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்து வருகிற ஜனவரி மாதம் 8,9–ந் தேதிகளில் நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக முருகையா, துணைத்தலைவர்களாக செல்லப்பா, பாபு ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, செயலாளராக வினோத்குமார், உதவி செயலாளர்களாக முத்துக்குமார், பாஸ்கர், முனியராஜ், பொருளாளராக பிரதிபா உள்பட மாநில நிர்வாக குழுவில் 21 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story