பண மோசடி செய்த மகன் தலைமறைவு: பெற்றோர் தீக்குளித்து தற்கொலை


பண மோசடி செய்த மகன் தலைமறைவு: பெற்றோர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பண மோசடி செய்த மகன் தலைமறைவானதால் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

கரூர்,

கரூர் எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் பாபு (வயது 45). கோர்ட்டில் குமாஸ்தாவாக பணியாற்றி வந்த இவர் விருப்ப ஓய்வுபெற்று, வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள் பலரிடம் தனக்கு அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதற்கு முன்பணம் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதனை நம்பி இளைஞர்கள் பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் பாபு பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள், பொதுமக்கள் பலர் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்தனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பாபு அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் அவர் தலைமறைவானது தெரியவந்தது.

இதனிடையே பணத்தை கொடுத்து ஏமாந்த பலர் பாபுவின் தந்தை கஸ்தூரி(70), தாய் கவுசல்யா(65) ஆகியோரிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்து, இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கஸ்தூரி உயிரிழந்தார். கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பாபுவிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்ததால் இருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண மோசடி செய்து தலைமறைவான பாபுவுக்கு, ஷோபா என்ற மனைவி உள்ளார். தன்வந்த் என்ற 4 வயது மகனும் இருந்தான். கடந்த ஆகஸ்டு மாதம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த போது, நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்றுப்பாலத்தில் மனைவி மற்றும் மகனுடன் சென்ற பாபு, அங்கு பாலத்தின் கைப்பிடி சுவர் அருகே மகனை தூக்கி வைத்துக்கொண்டு செல்போனில் செல்பி எடுத்த போது, தன்வந்த் தவறி ஆற்றுக்குள் விழுந்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் இறந்த பிறகு ஷோபா தனது தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார்.

இந்தநிலையில் பண மோசடி விவகாரத்தால் பாபுவின் பெற்றோர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பாபுவின் பெற்றோர் உடல்களை அவரது உறவினர்கள் வாங்க முன்வரவில்லை.

இதனால் அவர்களது உடல் கரூர் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவான பாபு எங்கு உள்ளார் என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story