சென்னிமலை அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சென்னிமலை அருகே அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னிமலை,
சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்டது துலுக்கம்பாளையம். இங்கு 100–க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஆழ்குழாய் கிணற்று நீர் முற்றிலும் சாயக்கழிவு நீராக மாறிவிட்டதால் குடிப்பதற்கு காவிரி குடிநீரை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
மேலும், சிப்காட்டில் வேலை செய்யும் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் துலுக்கம்பாளையம் கிராமத்துக்கு அருகிலேயே வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இவர்களும் காவிரி குடிநீரை அதிகம் பயன்படுத்தி வந்ததால் துலுக்கம்பாளையம் கிராம மக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் காலிக்குடங்களுடன் துலுக்கம்பாளையம் பஸ் நிறுத்தத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்த வழியாக சென்னிமலையில் இருந்து விஜயமங்கலம் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார், வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பஸ்சை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் காவிரி ஆற்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதற்கு அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், ‘தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் பஸ்சை விடுவித்து 10 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.