ரபேல் விமானம் தேவைதான் 200 சதவீதம் கூடுதல் விலைகொடுத்து வாங்கியதில் தான் முறைகேடு நடந்துள்ளது - மாணிக்கம்தாகூர் பேட்டி


ரபேல் விமானம் தேவைதான் 200 சதவீதம் கூடுதல் விலைகொடுத்து வாங்கியதில் தான் முறைகேடு நடந்துள்ளது - மாணிக்கம்தாகூர் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2018 4:30 AM IST (Updated: 3 Oct 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ராணுவத்திற்கு பிரான்ஸ் தயாரிப்பான ரபேல் விமானம் தேவை என்பதில் மாற்று கருத்து இல்லாத நிலையில், 200 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்கியதில் தான் முறைகேடு நடந்துள்ளது என அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான மாணிக்கம்தாகூர் குற்றம் சாட்டினார்.

விருதுநகர்,

விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:–

பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ரபேல் விமானம் இந்திய ராணுவத்திற்கு தேவை என்பதில் மாற்று கருத்து இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்த விமானத்தை ரூ.570 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திய ராணுவத்திற்கு 126 விமானங்கள் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. 18 விமானங்களை ஓடும் நிலையில் பெறுவது என்றும், மீதமுள்ள விமானங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தினை இந்திய அரசின் பொதுப்பிரிவு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக் நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த 2015–ம் ஆண்டு பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற பின்பு 15 இடங்களில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அரசு பொதுத்துறை நிறுவனத்திற்கு பதிலாக மூடப்பட்ட அம்பானியின் பயோனியர் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி சென்று வந்த பின்பு இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

ராணுவ மந்திரி ரபேல் விமானத்தை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறானதாகும். 36 விமானங்கள் ரூ.51 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு விமானம் ரூ.1670 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. 200 சதவீதம் கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ.570 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்ட விமானத்தை ரூ.1100 கோடி கூடுதல் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

மேலும் காங்கிரஸ் ஆட்சியின்போது 126 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. குறைந்த விலை என்று சொல்லிவிட்டு விமானங்களின் எண்ணிக்கையை தான் குறைத்துள்ளனர். மொத்தத்தில் பொதுத்துறை நிறுவனத்திற்கு பதிலாக தனியார் நிறுவனத்தை பரிந்துரை செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.

பாரதீய ஜனதா அரசின் இந்த முறைகேட்டினை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செலவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டாம் கட்ட பிரசார திட்டத்தை அறிவிக்க உள்ளார். அதன்படி கிராம மக்களை சந்தித்து இந்த முறைகேடு தொடர்பாக அவர்களிடம் விளக்கி கூற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.–காங்கிரஸ் கூட்டனி அமைவது உறுதி.

அகில இந்திய அளவில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதில் முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. ஆனால் தற்போது அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மேலும் கடந்த ஆண்டில் வாகன விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. அ.தி.மு.க. அரசு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் சொல்படிதான் நடந்து வருகிறது. மக்கள்நல திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டாமல் அமைச்சர்களும் அவர்களது பதவியை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக மாணிக்கம் தாகூர் விருதுநகர் ரெயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


Next Story