கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டப அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரியஒளி


கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டப அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரியஒளி
x
தினத்தந்தி 2 Oct 2018 11:15 PM GMT (Updated: 2 Oct 2018 8:34 PM GMT)

கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் விழுந்த அபூர்வ சூரியஒளியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.

கன்னியாகுமரி,

தேசபிதா மகாத்மா காந்தி அடிகள் 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி டெல்லியில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும்போது, கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி பல கலசங்களில் சேகரிக்கப்பட்டது.

அதில் ஒரு அஸ்தி கலசம் கன்னியாகுமரி கடலில் கரைப்பதற்காக 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த அஸ்தி கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. பின்னர், அவரது அஸ்தி முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் கரைக்கப்பட்டது. அதை நினைவு கூறும் வகையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் காந்தி நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த நினைவு மண்டபத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதி காந்தி அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தியின் அஸ்தி கட்டம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அஸ்தி கட்டத்தின் முன் காந்தியின் உருவப்படம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு குமரி மாவட்ட சர்வோதயா சங்க பெண்கள் ராட்டையில் நூல் நூற்றனர். சரியாக மதியம் 12 மணிக்கு காந்தி அஸ்தி கட்டத்தின் மீது அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்தனர். இந்த சூரிய ஒளி 10 நிமிடம் விழுந்தது. இந்த சூரிய ஒளியை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் காந்தி மண்டப ஊழியர்கள் 2 பேர் வெள்ளை துணியை கட்டத்தின் மீது பிடித்து அனைவரும் பார்க்கும் வகையில் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் , உதவி கலெக்டர்(பயிற்சி) பிரதீக் தயாள் ஆகியோர் கலந்து கொண்டு அஸ்தி கட்டத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த அபூர்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்போன்களில் படம் பிடித்தனர்.

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனும் காந்தி நினைவு மண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் வக்கீல் அசோகன், கன்னியாகுமரி மண்டல தலைவர் சுடலைமணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேஷ், அகஸ்தீஸ்வரம் மண்டல தலைவர் கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story