மந்திரிகளின் துறைகளை மாற்ற குமாரசாமி திட்டம் ஜெயமாலா, ஆர்.சங்கரை நீக்க முடிவா?


மந்திரிகளின் துறைகளை மாற்ற குமாரசாமி திட்டம் ஜெயமாலா, ஆர்.சங்கரை நீக்க முடிவா?
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கத்தின் போது சில மந்திரிகளின் துறைகளை மாற்ற முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். மேலும் மந்திரி பதவியில் இருந்து ஜெயமாலா, ஆர்.சங்கரை நீக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் மந்திரிசபையில் காலியாக உள்ள 7 இடங்களையும் நிரப்ப 2 கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். மேலும் வருகிற 10-ந் தேதி அல்லது 12-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படுவது உறுதி என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். இதனால் நீண்ட இழுபறிக்கு பின்பு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 25 எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மந்திரி பதவி கேட்டு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் மூத்த தலைவர்களை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுபோல, ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் காலியாக உள்ள ஒரு மந்திரி பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து தேவேகவுடா மற்றும் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் மந்திரியாக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்க உள்ளனர்.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கத்தின் போது சில மந்திரிகளின் துறைகளை மாற்றவும் முதல்-மந்திரி குமாரசாமி திட்டமிட்டுள்ளார். மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளை அவர்கள் சரியாக நிர்வகிக்காத காரணத்தால் இந்த முடிவுக்கு குமாரசாமி வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் இருந்து போலீஸ் துறை பறிக்கப்படலாம் என்றும், அந்த துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜிக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுதவிர மேலும் சில மந்திரிகளின் துறைகளை மாற்ற குமாரசாமி தி்ட்டமிட்டு்ள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் மந்திரிகள் ஜெயமாலா மற்றும் ஆர்.சங்கரை மந்திரி பதவியில் இருந்து நீக்க கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருவதாகவும், அதுபற்றி கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், காங்கிரஸ் சார்பில் உள்ள 6 இடங்களுக்கான மந்திரி பதவியை எம்.பி.பட்டீல், பி.சி.பட்டீல், துக்காரம், சங்கமேஷ்வர், சிவள்ளி மற்றும் ரூபா சசிதர் ஆகிய 6 பேருக்கு வழங்க சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அந்த 6 பேருக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

மேலும் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருப்பவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி, அவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக காங்கிரஸ் சார்பில் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க முடிவு செய்துள்ளனர்.

Next Story