விழுப்புரம்- புதுவை மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை


விழுப்புரம்- புதுவை மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2018 3:15 AM IST (Updated: 3 Oct 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- புதுவை மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ரேஷ்தா கூறினார்.

விழுப்புரம், 

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ரேஷ்தா நேற்று சென்னையில் இருந்து விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வைகை எக்ஸ்பிரசில் வந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று பயணிகளுக்கு குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பயணிகள் தங்கும் அறை, ரெயில்வே அதிகாரிகள் தங்கும் அறை, நிலைய மேலாளர், நிலைய அலுவலர்கள் அறை மற்றும் பயணச்சீட்டு கொடுக்கும் இடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறு ரெயில்வே நிலைய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

பின்னர் வடக்கு ரெயில்வே காலனி பகுதியில் ஏ.சி. வசதியுடன் புதுப்பிக்கப்பட்ட ரெயில் டிரைவர்கள் தங்கும் ஓய்வறையை பொதுமேலாளர் ஆர்.கே. குல்ரேஷ்தா திறந்து வைத்து, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி தெற்கு ரெயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரெயில்வே ஓட்டுனர்கள், பாதுகாவலர் ஆகியோருக்கு ஏ.சி. அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதாலும், அங்குள்ள ரெயில் நிலையம் மற்றும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தவும், விழுப்புரம்- புதுவை மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை- மதுரை இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளது.

மதுரை-கன்னியாகுமரி, மதுரை-தூத்துக்குடி ஆகிய மார்க்கங்களுக்கான இரட்டை ரெயில் பாதை பணிகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் செய்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தெற்கு மண்டலத்தில் வருவாய் குறைவாக உள்ள ரெயில் நிலையங்களை ரெயில்வே நிர்வாகம் மூடி வருகிறது. அதுபோல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர், தெளி ஆகிய 2 ரெயில் நிலையங்கள் மூடப்பட உள்ளது. இந்த ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், மீண்டும் திறக்க ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது திருச்சி கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி, ரெயில்வே அதிகாரிகள் கார்த்திகேயன், வசிஷ்டராஜேந்திர கவுரவ் ஆகியோர் உடனிருந்தனர். 
1 More update

Next Story