போலீஸ்காரர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்


போலீஸ்காரர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்
x
தினத்தந்தி 2 Oct 2018 9:45 PM GMT (Updated: 2 Oct 2018 9:04 PM GMT)

கவுரிபித்தனூரில், போலீஸ்காரர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

கோலார் தங்கவயல்,

அதிகாலையில் நடந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபித்தனூர் தாலுகா பொம்மஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் என்கிற ‘லாங்’ அருண் (வயது 30). இவர் மீது கவுரிபித்தனூர் புறநகர் போலீசில் ஒரு கொலை, 4 கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருடைய பெயர், கவுரிபித்தனூர் புறநகர் போலீசில் ரவுடி பட்டியலிலும் உள்ளது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனாலும் அவர் போலீசில் சிக்காமல் தமைறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் ரவுடி அருண்குமார், தனது கூட்டாளிகள் மாருதி, சுரேஷ் ஆகியோருடன் கவுரிபித்தனூர் அருகே ஹொரட்டி கிராஸ் பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக கவுரிபித்தனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவினாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ், போலீஸ்காரர்கள் அருண், மஞ்சுநாத் ஆகியோருடன் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஜீப்பில் ஹொரட்டி கிராஸ் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு ரவுடி அருண்குமார் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அந்த சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ், 3 பேரும் சரணடைந்துவிடும்படி துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனாலும் அவர்கள் சரணடைய மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீஸ்காரர்கள் அருண், மஞ்சுநாத் ஆகியோர் அவர்களை பிடிக்க சென்றனர். அப்போது, ரவுடி அருண்குமார், தான் வைத்திருந்த அரிவாளால் போலீஸ்காரர்கள் 2 பேரையும் தாக்கியதோடு தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார்.

அந்த சமயத்தில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி அருண்குமாரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார். அப்போது ஒரு குண்டு, அருண்குமாரின் இடது காலில் பாய்ந்தது. இதனால் அருண்குமார் சுருண்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவுடி அருண்குமாரை போலீஸ் அதிகாரி அவினாஷ் பிடித்தார். மேலும் அவருடைய கூட்டாளிகள் 2 பேரையும் அவர் பிடித்து கைது செய்தார்.

பின்னர் குண்டுக்காயமடைந்த ரவுடி அருண்குமார், அரிவாளால் வெட்டு்காயமடைந்த போலீஸ்காரர்கள் அருண், மஞ்சுநாத் ஆகியோர் கவுரிபித்தனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ்காரர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ரவுடி அருண்குமாருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கவுரிபித்தனூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story