கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதல் தண்ணீர்


கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதல் தண்ணீர்
x
தினத்தந்தி 3 Oct 2018 3:15 AM IST (Updated: 3 Oct 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதல் தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. சின்னமனூர் அருகே கன்னிசேர்வைப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். அவர், அங்கு வைக்கப்பட்டு இருந்த காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கிராமசபை கூட்டம் அங்குள்ள ஆலமரத்தடியில் நடந்தது.

கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசியதாவது:-

கிராமங்கள் நகரங்களாக மாறிவருகிற இன்றைய காலகட்டத்தில் கிராமங்கள் அடிப்படை வளர்ச்சியில் தன்னிறைவு அடையும் போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாற்றுகிறது. தமிழக அரசால் செயல்படுத்தபட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளதா? என்பதை கிராமசபை கூட்டங்களின் மூலமே அறிய முடிகிறது.

சுகாதாரமான தமிழகத்தை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தனிநபர் கழிப்பிட வசதி மற்றும் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து வீடுகளிலும் கழிப்பிடம் அமைக்க வேண்டும். இந்த கிராமசபை கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் உத்தமபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிராம பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர் அளவை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவ்வாறு பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அபிதாஹனீப், தாசில்தார் உதயராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Next Story