ரூ.45 லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள், பொது சுகாதார வளாகம்


ரூ.45 லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள், பொது சுகாதார வளாகம்
x
தினத்தந்தி 2 Oct 2018 10:00 PM GMT (Updated: 2 Oct 2018 9:27 PM GMT)

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்கரட்டுப்பட்டியில் ரூ.45 லட்சம் செலவில் 3 ஆழ்துளை கிணறுகள் மற்றும் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது என்று கிராமசபை கூட்டத்தின்போது கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

சத்திரப்பட்டி,


காந்திஜெயந்தியையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ரெட்டியப்பட்டி ஊராட்சி சின்னக்கரட்டுப்பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசின் திட்டங்களை கிராமப்புற மக்கள் அறிந்துகொண்டு பயன்பெறும் வகையிலும், அடிப்படை வசதிகள், முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது. தனிநபர் இல்லக்கழிப்பறை கட்ட வேண்டும். சின்னக்கரட்டுப்பட்டியில் ரூ.45 லட்சத்தில் 3 ஆழ்துளை கிணறுகள் மற்றும் 27 அறைகளுடன் கூடிய 2 பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. சின்னக்கரட்டுப்பட்டி ஊராட்சி திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத கிராமமாக தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தின்போது, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பொதுவினியோக திட்டம், குழந்தைகள் நலன் உள்ளிட்டவை குறித்தும் கலெக்டர் விவாதித்தார்.

இந்த கூட்டத்தில் சப்-கலெக்டர் (பயிற்சி) சேக்அப்துல் ரகுமான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story