கரூரில் 15 தனியார் மருத்துவமனைகளில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு சேவை அமைச்சர் தகவல்


கரூரில் 15 தனியார் மருத்துவமனைகளில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீடு சேவை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2018 4:15 AM IST (Updated: 3 Oct 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 15 தனியார் மருத்துவமனைகளில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சேவை செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பள்ளபட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களும் நலவாழ்வு மையம் என்று தரம் உயர்த்தப்பட்டு செயல்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து மக்களும் எளிதில் அணுகக்கூடிய, தரமான சுகாதார நல சேவைகளை பெற முடியும்.

இதில் கர்ப்பகால மற்றும் மகப்பேறு சேவைகள், குழந்தைகள் வளர் இளம் பருவ நலச்சேவைகள், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை மற்றும் சேவைகள், கண் பரிசோதனை உள்ளிட்ட 12 வகையான சுகாதார நல சேவைகளும், 40 வகையான ஆய்வக பரிசோதனைகளும் அளிக்கப்படுகிறது. “அனைவருக்கும் நலவாழ்வு“ என்பது அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து சுகாதார நல சேவைகள் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே இலவசமாக தரமான வகையில் வழங்குவதே இதன் நோக்கமாகும்.

5-10 கிராமங்களுக்கு அதனுள்ளேயே ஒரு நலவாழ்வு மையத்தினை மேம்படுத்தி, தேவையான மருந்துகள், ரத்தப்பரிசோதனைகள் ஆகியவற்றை நலவாழ்வு மையம் மூலமாக ஏற்படுத்தி கொடுத்து மக்களுக்காக சேவை ஆற்றுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டமானது அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் தரமான, விரைவில் அணுகக்கூடிய, வேறுபாடற்ற, எளிமையான சுகாதார நல சேவைகளை நிதி நெருக்கடி இல்லாமல் பெற ஏதுவாக அமைகிறது.

இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவ சேவைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அதற்கும் மேற்படியாக அரசு துணை சுகாதார நிலையங்களிலும் இலவச மருத்துவ சேவைகள் பெற வழிவகுக்கிறது. நமது கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டாரத்தில் இத்திட்டமானது முதல் கட்டமாக 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 துணை சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்களில் ஒரு கிராம சுகாதார செவிலியர் என்ற நிலை மாறி இனி வரும் காலங்களில் 2 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றுவார்கள்.

மேலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சேவை கரூரில் 15 தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர 800 படுக்கை வசதிகள் கொண்ட சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் மற்றும் மாநகர போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக ஒரே பயண அட்டையில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணிகள் பயணம் செய்யலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து 18 செவிலியர்களுக்கு கிராம சுகாதார செவிலியர்களுக்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் பிரபு, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.ஜி.ஆர்.மனோகரன், நகர செயலாளர் சி.ஏ.சையதுஇப்ராகிம், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் பி.குருசாமி, ஊராட்சி செயலாளர் கணேசன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story