ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வருவது மக்கள் விரோத நடவடிக்கை

தமிழகத்துக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வருவது மக்கள் விரோத நடவடிக்கை என்று வேலூர் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறினார்.
வேலூர்,
சென்னை, தூத்துக்குடி, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது, அரசுக்கு எதிராக அவதூறாக பேசியது உள்பட பல்வேறு குற்றவழக்குகளின் கீழ் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து 55 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த திருமுருகன் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4 நாட்களாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு கோர்ட்டுகள் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் வேலூர் ஜெயிலில் இருந்து மாலை 5 மணியளவில் வெளியே வந்தார்.
அப்போது திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
தொடர்ச்சியாக பொய் வழக்குகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எங்கள் இயக்கத்தை முடக்கி வருகிறது. ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான கருத்துரிமை தமிழகம் முழுவதும் மறுக்கப்பட்டு வருகிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆனால் பல்வேறு குற்றங்கள் செய்யும் பா.ஜனதா ஆதரவு நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கக்கூடிய அனைவரின் குரலையும் நசுக்குகிற வேலையை மாநில அரசு செய்து வருகிறது. இந்த மாதிரியான சூழல் தமிழகத்தில் இதற்கு முன்பாக இருந்ததில்லை.
தற்போது தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவது மக்கள் விரோத நடவடிக்கையாகும். மக்கள் பிரச்சினைக்காக எங்கள் இயக்கம் தொடர்ந்து குரல் கொடுக்கும். வருங்காலங்களில் மக்களுக்காக தொடர்ந்து ஜனநாயக வழியில் மே 17 இயக்கம் போராடும். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிய போவது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






