பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்


பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2018 4:00 AM IST (Updated: 3 Oct 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடியாத்தம், 


குடியாத்தம் ஒன்றியம் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் எஸ்.ஏ.ராமன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட மாவட்ட அலுவலர் சிவராமன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பு லட்சுமி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பிரேம்குமார், மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலர் கஜேந்திரன், மாவட்ட ஆய்வுக்குழு உதவி அலுவலர் ஜோதி, தாசில்தார் பி.எஸ்.கோபி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.ராமு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சி.ரகு வரவேற்றார். கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது:-

அரசின் எல்லாவிதமான வளர்ச்சி திட்டங்களும் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் தனிநபர் கழிவறை கட்டாயம் கட்ட வேண்டும். சில வீடுகளில் கட்டப்படாமல் உள்ளது. திறந்தவெளியை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 2¾ லட்சத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பொருட்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருக்கும் படித்த இளைஞர்கள் புதிய தொழில்கள் தொடங்க மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து ஊராட்சியில் அரசு மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் பல்வேறு துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தனிநபர் கழிவறை அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள் ஜனார்த்தனன், விஜயலட்சுமி பாலாஜி, வேணுகோபால், கோபி, வெங்கடேசன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் டி.கோபி, சண்முகம், முன்னாள் தலைவர் கொட்டமிட்டா பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் எஸ்.ஏ.ராமன், ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மாணிக்கம், சின்னமுருகன், கோவில் நிர்வாகிகள் பத்மநாபன், சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவரத்தினம் உள்பட ஏராளமான பொதுமக்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story