மாருதி பலேனோ ஸ்பெஷல் எடிஷன் வெளியீடு

மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரபல மாடலான பலேனோவில் மேம்படுத்தப்பட்ட மாடலை ஸ்பெஷல் எடிஷனாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வட மாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் தசரா மற்றும் அதைத் தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம்தான் ஸ்விப்ட், இக்னிஸ் ஆகிய மாடல்களில் ஸ்பெஷல் எடிஷன் வெளியிடப் பட்டது. தற்போது பலேனோவிலும் ஸ்பெஷல் எடிஷனை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வழக்கமான பலேனோ மாடல் காரை விட இதில் வடிவமைப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கிரே கலர் கான்டிராஸ்டு வண்ணமாக இதில் பூசப்பட்டு பார்ப்பதற்கு அழகிய தோற்றப் பொலிவில் வந்துள்ளது. இதன் உள்பகுதியில் சீட் கவர்கள் குவில்ட் டிசைனிலும், தரை விரிப்புகள் 3-டி வடிவமைப்பிலும், அழகுற மிளர்கின்றன. ஒளிரும் ஸ்கப் பிளேட்ஸ், ஸ்மார்ட் கீ பைண்டர், மிருதுவான இருக்கை ஆகியன இதில் கூடுதல் சிறப்பம்சமாகும்.
1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினுடன் இது வந்துள்ளது. வாகனத்தின் என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. ஸ்டாண்டர்ட் மாடலை விட இது உத்தேசமாக ரூ.35 ஆயிரம் கூடுதலாக இருக்கும்.
இந்த ஸ்பெஷல் எடிஷன் கார் ஹூண்டாய் ஐ-20, ஹோண்டா ஜாஸ் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதேபோல அடுத்த ஆண்டு டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ஹேட்ச்பேக் மாடலுக்கு இது போட்டியாக இருக்குமாம்.
Related Tags :
Next Story






