ஸ்டார் சிட்டி பிளஸ் அறிமுகம்


ஸ்டார் சிட்டி பிளஸ் அறிமுகம்
x
தினத்தந்தி 3 Oct 2018 2:29 PM IST (Updated: 3 Oct 2018 2:29 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல மாடலான ஸ்டார் சிட்டி மோட்டார் சைக்கிளில் மேம்பட்ட மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்டார் சிட்டி பிளஸ் என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனையக விலை ரூ.52,907 ஆகும்.

இரட்டை வண்ணக் கலவையில் பார்ப்பதற்கே அழகாக காட்சி தரும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கிரே மற்றும் கருப்பு நிறக் கலவையில் இதன் தோற்றம் பார்ப்பவர்களை கொள்ளை கொள்ளும். கருப்பு சிவப்பு, கருப்பு நீலம், சிவப்பு கருப்பு ஆகிய நிறக் கலவைகளிலும் இது கிடைக்கும்.

இந்த மோட்டார் சைக்கிள் 110 சி.சி. திறன் கொண்டது. இதில் முதல் முறையாக எஸ்.பி.டி. எனப்படும் ஒருங்கிணைந்த பிரேக் செயல்பாடு தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரேக் பிடிக்கும் போது முன்புற மற்றும் பின்புற சக்கரங்கள் ஒரே சமயத்தில் நிற்கும். இதனால் பிரேக் பிடிக்கும்போது வாகனம் வழுக்கி செல்வது தவிர்க்கப்படும்.

இரண்டு சக்கரங்களிலுமே டிரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 110 சி.சி. திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் இத்தகைய தொழில்நுட்பத்தை அளிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையை டி.வி.எஸ். பெற்றுள்ளது. என்ஜினில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. ஒற்றை சிலிண்டர், நான்கு ஸ்டிரோக் என்ஜின் ஆகியவற்றுடன் இது வந்துள்ளது. நான்கு கியர்களைக் கொண்டது. 17 அங்குல 5 ஸ்போக்ஸ் அலாய் சக்கரத்தைக் கொண்டதாக இது வந்துள்ளது.

இதே விலைப் பிரிவில் ஹோண்டா டிரீம் யுகா (ரூ. 53,709), ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் (ரூ. 54,900), பஜாஜ் டிஸ்கவர் 110 (ரூ. 51,674), யமஹா சல்யூடோ ஆர்.எக்ஸ். (ரூ. 49,221) ஆகியவற்றுக்குப் போட்டியாக ஸ்டார் சிட்டி பிளஸ் இருக்கும்.
1 More update

Next Story