ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி


ஆழ்கடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலி
x
தினத்தந்தி 4 Oct 2018 3:00 AM IST (Updated: 3 Oct 2018 5:33 PM IST)
t-max-icont-min-icon

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி,

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

காற்றழுத்த தாழ்வு நிலை

தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மதியம் வரை லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி, மீனவ கூட்டுறவு சங்கங்கள், மீனவ கிராமங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தள மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அறிவிப்பு கடிதம் அனுப்பி உள்ளார். இதில் அவர் கூறி இருப்பதாவது:–

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையின்படி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவி கடல் பகுதியில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் நிலை உள்ளது.

கரைக்கு திரும்ப அறிவுறுத்தல்

அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்துக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும். எனவே மீனவர்கள் யாரும் அந்த நாட்களில் தென்கேரள கடல் பகுதி, லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

ஆழ்கடல் மீன்பிடிப்பவர்கள் நாளைக்குள்(வெள்ளிக்கிழமை) கடற்கரைக்கு திரும்ப வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தொலைபேசி, கடிதம் மூலம் அவ்வப்போது மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கை தெரிவிக்கப்படும். இதனை அனைத்து மீனவர்களும் அறியும் வகையில் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

1 More update

Next Story