பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்


பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:00 AM IST (Updated: 4 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

தில்லையாடி ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொறையாறு,

பொறையாறு அருகே தில்லையாடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் தமிழழகன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் உமாசெல்வி வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு- செலவு கணக்குகள், முதியோர் உதவி தொகைக்கான பயனாளிகள் பட்டியல் ஆகியவை படிக்கப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:-

தில்லையாடி ஊராட்சியில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும், தனிநபர் கழிவறை குறித்து பொதுமக்களிடம் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்து கொள்ள பொதுமக்களை கேட்டு கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தில்லையாடி பெருமாள் கோவில் அருகே உள்ள குளக்கரையில் ஈமச்சடங்கு மண்டபம் அமைப்பது, தில்லையாடி ஊராட்சியில் பழுதடைந்த குப்பை அள்ளும் டிராக்டரை உடனே சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். ஊராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கான வரவு-செலவு கணக்குகளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பொதுமக்களை ஒன்றுத்திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story