காட்சிமுனையில் காட்டுயானைகள் முகாம்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை


காட்சிமுனையில் காட்டுயானைகள் முகாம்; சுற்றுலா பயணிகள் செல்ல தடை
x
தினத்தந்தி 3 Oct 2018 10:45 PM GMT (Updated: 3 Oct 2018 7:28 PM GMT)

வால்பாறை நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வால்பாறை,

வால்பாறை வனப்பகுதிகளுக்கு கேரள வனப்பகுதிகளிலிருந்து வரத்தொடங்கி உள்ள காட்டுயானைகள் கூட்டம் ஆங்காங்கே முகாமிட்டுள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதிகளிலும் காட்டுயானைகள் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் கேரள வனப்பகுதியிலிருந்து வந்த 12 காட்டுயானைகள் கூட்டம் கடந்த 2 நாட்களாக முத்துமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்தன. பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் சென்ற காட்டுயானைகள் நல்லமுடி எஸ்டேட் சாலையை கடந்து வால்பாறையின் முக்கிய சுற்றுலாதலமாக விளங்கும் நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் அதிகாலை முதல் முகாமிட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன்கருதி அந்த பகுதிக்கு செல்வதற்கு மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனால் தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு வந்திருந்த சுற்றுலாபயணிகள் நல்லமுடிபூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு செல்லமுடியாமல் திரும்பிச் சென்றனர். இந்த யானைகள் தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நின்று வருகின்றன. எனவே சுற்றுலாபயணிகள் சாலை ஓரங்களில் உள்ள வனப்பகுதிகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி உணவு அருந்துவது, புகைப்படங்கள் எடுப்பது அல்லது வனப்பகுதிக்குள் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் தலைமையில் வனத்துறையினர் தாய்முடி, ஆனைமுடி, நல்லமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வால்பாறையில் பன்னிமேடு எஸ்டேட் தொழிற்சாலை பிரிவு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு குட்டிகள் உட்பட 6 காட்டுயானைகள் கூட்டம் புகுந்தன. அவைகள் அங்குள்ள காந்தி என்பவரின் வீட்டின் சமையலறை ஜன்னலை இடித்து துதிக்கையை உள்ளே விட்டு பொருட்களை எடுத்து சேதப்படுத்தின. இதனால் காந்தி தனது மனைவி குழந்தைகளுடன் வீட்டின் பரன் மீது ஏறி பதுங்கிக் கொண்டார். சிறிது நேரம் அங்கு நின்ற காட்டுயானைகள் கூட்டம் அங்கிருந்து சென்று கிளம்பின. பின்னர் அருகில் இருந்த தேயிலை தொழிற்சாலை அதிகாரி கபீர் என்பவரின் வீட்டு சுவர்களை இடித்து தள்ளி, உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தின. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். வனப்பகுதிக்கு செல்லும் வழியிலும் அந்த யானைகள் அட்டகாசம் செய்தன. அந்த பகுதியில் தாமஸ் என்பவர் நடத்திவரும் மளிகைக்கடையை இடித்து சேதப்படுத்திவிட்டு, அருகிலிருந்த சி.எஸ்.ஐ.ஆலய கதவையும் சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

 வால்பாறை வனச்சரகம் அய்யர்பாடிஎஸ்டேட் பகுதியில் உள்ளதைப் போல மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட முடீஸ், பன்னிமேடு, சிங்கோனா ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முழுமையான வாகன வசதி மற்றும் தொலை தொடர்பு சாதன வசதிகளுடன் கூடுதல் வேட்டைத்தடுப்பு காவலர்களை கொண்ட மனிதவனவிலங்குமோதல் தடுப்பு மையம் அமைக்க வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் யானைகள் வந்து விட்டால் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். எஸ்டேட் நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வாகனங்கள் செல்லும் அளவிற்கு பாதைகள் அமைத்து கொடுத்தால் வனவிலங்குகள் வரும் போது வாகனங்களுடன் சென்று விரட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்றனர்.


Next Story