எய்ம்ஸ் விவகாரத்தில் அமைச்சர்கள் பேசுவது நம்பும்படியாக இல்லை - திருச்சி சிவா எம்.பி. பேச்சு


எய்ம்ஸ் விவகாரத்தில் அமைச்சர்கள் பேசுவது நம்பும்படியாக இல்லை - திருச்சி சிவா எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 4 Oct 2018 5:00 AM IST (Updated: 4 Oct 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

எய்ம்ஸ் விவகாரத்தில் அமைச்சர்கள் பேசுவது நம்பும்படியாக இல்லை என மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கூறினார்.

மதுரை,

அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்றது. பகுதி செயலாளர் தவமணி தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் கணேசன், மாணவர் அணி அமைப்பாளர் சுதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி, பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, குழந்தைவேலு உள்ளிட்டோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:–

அ.தி.மு.க. அரசில் ஊழல்கள் நிறைந்துவிட்டன. எல்லா துறையிலும் ஊழல், லஞ்சம் மலிந்திருக்கிறது. மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை கூட லஞ்சம் கொடுத்துதான் பெற வேண்டிய நிலை உள்ளது. ஆளும் கட்சி முறையாக செயல்படவில்லை என்றால் அதனை விமர்சிக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அந்த உரிமையை கூட எதிர்க்கட்சிகள் போராடி தான் பெற வேண்டியதாக இருக்கிறது. முதல்–அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒருமையில் பேசிவருகிறார்கள். முதல்–அமைச்சர் எல்லை மீறி பேசுகிறார்.

தமிழகத்தில் ஆட்சி சரியாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ஊழல், நிர்வாக சீர்கேடு, சர்வாதிகாரம் உள்ளிட்டவையே நடக்கிறது. பெண்களை இழிவாக பேசுபவர்களுக்கு, அரசு பாதுகாப்பு அளிக்கிறது. அரசு குறித்து பேச முயற்சி செய்தால் கைது செய்யப்படுகிறார்கள். முதல்–அமைச்சருக்கு அரசியல் அறிவு கிடையாது. வருகிற தேர்தலில் மக்கள் பொறுப்புடன் செயல்பட்டு வாக்களிக்க வேண்டும். தவறானவர்களை தேர்வு செய்தால் அவர்களை விரட்டுவதே உங்களின் வேலையாக மாறிவிடும். எனவே நாட்டை காப்பாற்றுகின்ற நல்ல தலைவரை தேர்வு செய்ய வேண்டும். ஊழல் நிறைந்த அ.தி.மு.க. அரசை தேர்தல் மூலம் மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

அமைச்சர்கள் பணம் சம்பாதிப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் மட்டும் தான் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் போன்றவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. இது தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மதுரைக்கு எய்ம்ஸ் வரும் என அமைச்சர்கள் கூறுவது நம்பும்படியாக இல்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story