வழக்குகளில் ஆஜராகாத கிரானைட் அதிபர்கள் உள்பட 8 பேருக்கு பிடிவாரண்டு


வழக்குகளில் ஆஜராகாத கிரானைட் அதிபர்கள் உள்பட 8 பேருக்கு பிடிவாரண்டு
x
தினத்தந்தி 4 Oct 2018 4:15 AM IST (Updated: 4 Oct 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கிரானைட் வழக்குகளில் ஆஜராகாத கிரானைட் அதிபர்கள் உள்பட 8 பேரை 7 நாட்களுக்குள் கைதுசெய்து ஆஜர்படுத்த மேலூர் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இங்கு பல்வேறு முறைகேடு நடந்ததால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதன் பின்னர் அரசு அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கிரானைட் அதிபர்களை போலீசார் கைது செய்தனர். அரசு அனுமதி பெறாமலும், அரசு இடத்தில் கிரானைட் கற்களை வெட்டியும், பொதுப்பணித்துறை பாசன கால்வாய்களை அழித்து சேதப்படுத்தியும், அனுமதி பெறாமல் வெடி மருந்துகளை வைத்திருந்தது, பயன்படுத்தியது மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது என பல்வேறு முறைகேடுகள் குறித்து மேலூர் கோர்ட்டில் 80–க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

மேலும் தனியார் இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கோரி அப்போதைய மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் கோர்ட்டில் 100–க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்தார். அரசு சிறப்பு வக்கீலாக ஷீலா நியமிக்கப்பட்டு குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது மேலூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பழனிவேல் முன்பு தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் கிரானைட் முறைகேடுகள் குறித்து போலீசார் தொடர்ந்த 20 வழக்குகளும், கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி அப்போதைய கலெக்டர் சுப்பிரமணியன் தொடர்ந்த 23 வழக்குகள் ஆகியவற்றின் மீதான விசாரணைகள் மாஜிஸ்திரேட்டு பழனிவேல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. போலீசார் தொடர்ந்த 2 வழக்கில் ஆஜராகாத சிந்து கிரானைட் அதிபர் செல்வராஜ், தீபா இம்பெக்ஸ் இந்தியா கிரானைட் அதிபர் சந்திரன், அவரது மனைவி சந்திரா, ஊழியர் எட்வர்டு ராஜபாண்டியன், வெடிமருந்து வியாபாரி மோகன் ஆகியோரும், பி.எஸ். கிரானைட் ஊழியர்கள் ஆறுமுகம், முருகன் ஆகியோரும், பிபின் முல்ஜிதக்கார் கிரானைட் அதிபர் மோகன் ஆகியோரை 7 நாட்களுக்குள் கைது செய்து வருகிற 10–ந்தேதியன்று மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு பழனிவேல் உத்தரவிட்டார்.

இடையபட்டியில் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் அடுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதி கோரி கலெக்டர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி நர்கீஸ் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அரசு சிறப்பு வக்கீல் ஷீலா விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் போலீசார் தொடர்ந்த வழக்குகளை அடுத்த மாதம் 28–ந்தேதிக்கும், கலெக்டர் தொடர்ந்த வழக்குகளை டிசம்பர் மாதம் 5–ந்தேதிக்கும் மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.


Next Story