கட்டண உயர்வை கண்டித்து காமராஜர் பல்கலைக்கழகம் முற்றுகை; 4 மாவட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் உள்ளன. இதில் தன்னாட்சி கல்லூரிகள் தவிர பிற கல்லூரிகளுக்கான தேர்வுக்கட்டணத்தை பல்கலைக்கழகம் வசூலித்து வருகிறது. இதற்கிடையே, இந்த கல்வியாண்டு முதல் பருவமுறை தேர்வு கட்டணத்தை பல்கலைக்கழக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே மதிப்பெண் சான்றிதழ், பட்டச்சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், நகல் சான்றிதழ் ஆகியவற்றுக்கான கட்டணம் பலமடங்கு உயர்த்தியது. இந்த நிலையில், மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட 57 வகையான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது, இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கட்டணம் கடந்த கல்வியாண்டில் ரூ.65 லிருந்து ரூ.78 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது அந்த கட்டணம் ரூ.110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுக்கட்டணம் ரூ.175 ஆகவும், எம்.பில். தேர்வுக்கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்திய மாணவர் சங்கம் தெரிவித்திருந்தது. அதன்படி, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 250–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் இந்திய மாணவர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் அருண்சுர்ஜித், மாநில துணைத்தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சின்னையா மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராமகிருட்டிணன் ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இளநிலை பட்டப்படிப்புக்கு ரூ.110 ஆக உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரூ.100 ஆக குறைப்பதாகவும், நேற்றுடன் முடிவடைந்த தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான காலத்தை வருகிற 10–ந் தேதி வரை நீட்டிப்பு செய்வதாகவும் உறுதியளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.