ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் ஆஜர்


ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் ஆஜர்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:30 PM GMT (Updated: 3 Oct 2018 8:36 PM GMT)

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய நிர்மலாதேவி, தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பரிமளா முன்னிலையில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது சென்னை சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், வழக்கு விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது என்றும், கல்லூரி மாணவிகளின் நலன் கருதி, அவர்கள் பாதிக்கப்படாத வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவின் நகல் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அக்டோபர் 26–ந்தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் 3 பேரும் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story