தீ விபத்தில் 2 பழக்கடைகள் சேதம்

ஓசூரில் தீ விபத்தில் 2 பழக்கடைகள் கருகி நாசமாயின.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் அட்கோ செல்லும் முகப்பில் சாலையோரம் சிலர் கூடாரம் அமைத்து பழம் மற்றும் பெட்டிக்கடைகளை நடத்தி வருகின்றனர். எந்நேரமும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில்தான் அ.தி.மு.க கட்சி அலுவலகமும் உள்ளது.நேற்று அதிகாலை சாலையோரம் இருந்த பழக்கடை ஒன்றில் திடீர் என தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் மளமளவென்று தீ பரவி பக்கத்தில் உள்ள மற்றொரு பழக்கடையிலும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 2 கடைகளும் மற்றும் அதில் இருந்த பழங்களும் கருகி நாசமாயின. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கடையில் உள்ள மின் இணைப்பு கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது அந்த வழியாக சென்ற யாரேனும் சிகரெட் புகைத்து அதை அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து நேர்ந்திருக்குமா? என்று பல கோணங்களில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






