ரூ.50 லட்சத்திற்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு


ரூ.50 லட்சத்திற்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 8:43 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.50 லட்சத்திற்கு கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் பிரபாகர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி, 


காந்தி பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அலுவலக வளாகத்தில் காந்தி உருவப்படத்தை திறந்து வைத்து, கதர் ஆடை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தள்ளுபடி விலையில் தீபாவளி சிறப்பு கதர் துணிகள் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு, தீபாவளி சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் மற்றும் உல்லன் ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு அளித்துள்ள தள்ளுபடியினை பயன்படுத்தி, அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அதிக அளவில் கதர் ரகங்களை கொள்முதல் செய்து பயனடையவும், ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி, ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கதர் வாரிய மேலாளர் ஜானகிராமன், தொழில்நுட்ப வல்லுனர் அருள்பிரகாசம், நகராட்சி ஆணையர் ரமேஷ், நகராட்சி துப்புரவு அலுவலர் மோகனசுந்தரம், ஆய்வாளர் சிவக்குமார், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்கள், கதர் வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story