பெட்ரோல் பங்கில் தீப்பிடித்ததால் பரபரப்பு கண்ணாடி வெடித்து சிதறியதில் ஊழியர் படுகாயம்


பெட்ரோல் பங்கில் தீப்பிடித்ததால் பரபரப்பு கண்ணாடி வெடித்து சிதறியதில் ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெட்டவாய்த்தலை அருகே பெட்ரோல் பங்கில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்தில் கண்ணாடி வெடித்து சிதறியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

ஜீயபுரம்,

பெட்டவாய்த்தலை அருகே காவல்காரபாளையத்தில் திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் திருச்சி தென்னூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. பைபாஸ் சாலையோரத்தில் பங்க் இருப்பதால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஓட்டுனர்கள், பங்கில் பெட்ரோல், டீசலை நிரப்பி செல்வது வழக்கம்.

நேற்று மாலை அங்கு பூமிக்கடியில் உள்ள டேங்கில் பெட்ரோல் காலியாகி விட்டது. அதைத்தொடர்ந்து இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரியில் பெட்ரோல் கொண்டு வரப்பட்டது. இரவுப்பணியில் அங்கு 6 ஊழியர்கள் இருந்தனர். இரவு 7.40 மணிக்கு டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோலை பூமிக்கடியில் இருக்கும் டேங்கில் ஊழியர்கள் உதவியுடன் நிரப்பும் பணி நடந்தது.

அப்போது டேங்கில் இருந்து காற்று வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘ஏர் வால்வு’ அடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்ய முயன்றபோது மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதையடுத்து ஊழியர்கள் அவசர தீயணைப்பு சிலிண்டர் உதவியுடன் தீயை அணைத்தனர்.

ஆனால் தீயை அணைத்தபோது வெளியேறிய தீப்பொறி 15 அடி தூரத்தில் உள்ள என்ஜின் ஆயில் கேன்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று விழுந்தது. இதனால், என்ஜின் ஆயில் தீப்பற்றி மள மளவென எரியத்தொடங்கியது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் நிரப்ப வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அங்கிருந்து வண்டியுடன் ஓட்டம் பிடித்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீப்பற்றிய பெட்ரோல் விற்பனை நிலையம் பைபாஸ் சாலையோரம் இருந்ததால், திருச்சி-கரூர் சாலையில் வாகன போக்குவரத்தும் அப்படியே ஸ்தம்பித்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் தீ விபத்தில் அறையின் ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறின. இதில் கண்ணாடி சிதறல்கள் பட்டதில், பங்க் ஊழியர் காவல்காரபாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது24) என்பவருக்கு கையை கிழித்து ரத்தம் சொட்ட தொடங்கியது. படுகாயம் அடைந்த அவரை உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தகவல் கிடைத்ததும் திருச்சி, முசிறி ஆகிய இடங்களில் இருந்து 2 தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிட போராட்டத்துக்கு பின்னரே தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story