பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2018 3:15 AM IST (Updated: 4 Oct 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே, பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

ஆத்தூர்,


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அப்பசமுத்திரம் பாலிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33), லாரி டிரைவர். இவருடைய மனைவி தமிழரசி (26). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. தற்போது இவர்களுக்கு கஜோல் (3½) என்ற மகளும், சண்முகம் (2) என்ற மகனும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் இவர்களுக்குள் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தமிழரசி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் தாலுகா அம்மை அகரம் பகுதியை சேர்ந்த தமிழரசியின் பெற்றோர் முத்துசாமி- சின்னம்மாள் ஆகியோர் ஆத்தூருக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆத்தூர் ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், தனது மருமகன் ராதாகிருஷ்ணனும், அவரது தாய் ஜெயம்மாளும் சேர்ந்து எங்களது மகளை அடிக்கடி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் அவள் மனவேதனை அடைந்து தற்கொலை செய்திருக்கலாம். எங்களது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இதன்பேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முன்னதாக தமிழரசியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாங்கள் எங்கள் மகளுக்கு கொடுத்த சீர்வரிசை பொருட்களை ராதாகிருஷ்ணன் வீட்டார் கொடுத்து விட்டுதான் அவளது உடலை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 
1 More update

Next Story