குப்பை உரக்கிடங்கு அமைக்கும் பணியை தடுத்து பொதுமக்கள் போராட்டம்


குப்பை உரக்கிடங்கு அமைக்கும் பணியை தடுத்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2018 9:45 PM GMT (Updated: 3 Oct 2018 9:08 PM GMT)

விழுப்புரத்தில் குப்பை உரக்கிடங்கு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுசம்பந்தமாக அமைதிக்கூட்டம் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

விழுப்புரம்,


விழுப்புரம் நகரில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பைகளை கொண்டு உரமாக தயாரித்து விவசாய பயன்பாட்டிற்கு அனுப்பவும், மக்காத குப்பைகளை தீ வைத்து எரிக்கவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரக்கிடங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக விழுப்புரம் நகரில் முதல்கட்டமாக 9 இடங்களில் உரக்கிடங்குகளை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு தற்போது விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், நாயக்கன்தோப்பு, மகாராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குப்பை உரக்கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இந்த உரக்கிடங்குகள் அமைப்பதாகவும், இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நாயக்கன்தோப்பு பகுதியில் மக்கள் போராட்டத்தை மீறி குப்பை உரக்கிடங்கு அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதனை தடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகம், கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.இருப்பினும் அதையும் மீறி தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று திரண்டு வந்து மீண்டும் பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீசார் மற்றும் நகராட்சி நகர்நல அலுவலர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த குப்பை உரக்கிடங்கு பணியை கைவிட்டால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். அப்போது சிலர், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். உடனே அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இதையடுத்து பொதுமக்களிடம் நகர்நல அலுவலர் ராஜா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், இந்த திட்டத்தினால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஓரிரு நாளில் தாசில்தார் தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தப்பட்டு இந்த திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், அதன் பின்னர்தான் பணிகள் தொடங்கும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story