திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

வேலூர்,

குடியாத்தம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த வாலிபருக்கு வேலூர் மகளிர் கோர்ட்டில் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா நல்லாகவணியூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 22 வயது இளம்பெண்ணை தூக்கிச்சென்று அங்குள்ள மலையடிவாரத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக்கூறி தொடர்ந்து 5 மாதம் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்தபெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மோகனிடம் அந்த பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 28.8.2013 அன்று இளம்பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த நிலையில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்துள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்கிய மோகனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

மேலும் ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும், இந்த தொகை போதாது என்பதால் உரிய இழப்பீடு வழங்க வேலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.


Next Story