கூட்டுறவு சங்கத்தில் ரூ.60 ஆயிரம் கையாடல்: முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை


கூட்டுறவு சங்கத்தில் ரூ.60 ஆயிரம் கையாடல்: முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 3 Oct 2018 9:39 PM GMT (Updated: 3 Oct 2018 9:39 PM GMT)

கூட்டுறவு சங்கத்தில் ரூ.60 ஆயிரம் கையாடல் செய்த முன்னாள் செயலாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடலூர், 

கடலூர் சாவடி முத்துசாமிநகரை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 56). இவர் கடந்த 1995-ம் ஆண்டு கடலூர் பாடலீஸ்வரர் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் செயலாளராக இருந்தார். இதையடுத்து அவர் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையுள்ள கால கட்டத்தில் சங்க சேமிப்பு கணக்கில் இருந்து 3 தவணையாக ரூ.60 ஆயிரத்தை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எடுத்தார்.

ஆனால் அந்த பணத்தை சங்க கணக்கில் கொண்டு வராமல், தன்னுடைய சொந்த உபயோகத்துக்காக கையாடல் செய்தார். இதை கடலூர் துணை பதிவாளர் தனகோபால் கடந்த 2002-ம் ஆண்டு தணிக்கை செய்த போது, கண்டுபிடித்தார். பின்னர் அவர் இது பற்றி கடலூர் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மீனாட்சிசுந்தரத்தை கைது செய்தனர். இதற்கிடையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு கடலூர் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி கோபாலக்கண்ணன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் மீனாட்சிசுந்தரம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Next Story