பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறப்பு; அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்


பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறப்பு; அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Oct 2018 10:00 PM GMT (Updated: 3 Oct 2018 9:47 PM GMT)

ராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நிரப்பப்படுகிறது. அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பெரிய கண்மாய் 7–வது மடையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்து தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் கூறியதாவது:– கடந்த ஆண்டு முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று வைகை தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் பயனாக மாவட்டத்தில் உள்ள 64 கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுஉள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீரை சுற்றுவட்டார நீர்நிலைகளில் சேமிக்க மடையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுஉள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். தமிழக அரசின் சார்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.

மாநாட்டில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மூலம் அதிகஅளவில் முதலீடுகளை ஈர்த்திடும் நோக்கில் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள முன்னணி நிறுவனங்களை சேர்ந்த செயல்அலுவலர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்துதொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு ஒற்றைச்சாளர முறை போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டுஉள்ளது.

இதன்மூலம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தகவல் தொழில்நுட்பவியல்துறையின் மூலம் மட்டும் சுமார் ரூ.25ஆயிரம் கோடி அளவில் முதலீடு பெறப்படும் என எதிர்பார்க்கிறோம். மேலும், 10 ஆயிரம் பேருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். கூவத்தூர் ரகசியங்களை வெளியிடுவேன் என்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கூறியுள்ளது, மல்லார்ந்து படுத்துக்கொண்டு காரி உமிழ்ந்தால் யார் மீது விழும் என்பதை கருணாஸ் உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிட கிருஷ்ணன், ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன்,ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவராமகிருஷ்ணன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அமைச்சர் டாக்டர் மணிகண்டன் உலக வர்த்தக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியதை தொடர்ந்து மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சாமிநாதன், முன்னாள் நகரசபை தலைவர் ராமமூர்த்தி, தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சிசுரேஷ்குமார், நகர் பொருளாளர் ஜெயக்குமார், நகர் பாசறை செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரமணா பில்டர்ஸ் நிறுவன இயக்குனர் பொறியாளர் காந்தி, என்ஜினீயர் வீரபூபதி ஆகியோர் வரவேற்றனர்.

இதில் ஜெயலலிதா பேரவை தலைவர் கதிரேசன், கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பால்பாண்டியன்,பால்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தூர்பாண்டியன், அ.தி.மு.க. கிளை செயலாளர் கோட்டைச்சாமி, கூட்டுறவு சங்க எழுத்தர் செந்தூர்பாண்டியன், ஊராட்சி செயலாளர் சண்முகவேல், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அமிர்தபாண்டியன், பிள்ளையார்குளம் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கதிரேசன், கத்தாளங்குளம் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story