ரூ.1 கோடியே 10 லட்சம் கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


ரூ.1 கோடியே 10 லட்சம் கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம்; கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:00 AM IST (Updated: 4 Oct 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கதர் விற்பனை மையத்தில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன் காந்தி உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி பண்டிகைக்கான 30 சதவீத கதர் பொருட்களின் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். அதை வாசுகி பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:–

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கதர் விற்பனை நிலையங்களில் கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், பட்டுச்சேலைகள், பெட்ஷீட்கள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் ரகங்களுக்கு 30 சதவீதம், பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் என சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்கள் வாங்கி பயன் பெற வேண்டும். கதர் அங்காடிகள் விடுமுறை நாட்களிலும் செயல்படும்.

கடந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கு அனைத்து மக்களும் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story