ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையன்


ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் - எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையன்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:15 PM GMT (Updated: 3 Oct 2018 10:05 PM GMT)

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையன் கூறினார்.

ஈரோடு,

திருச்சி கூட்டுறவு நாணய சங்க தேர்தல் வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு ரெயில்வே காலனியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் கண்ணையன் கலந்துகொண்டு பேசினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ரெயில்வேயில் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 4½ லட்சம் பேரின் வேலைகளை படிப்படியாக குறைக்கும் முயற்சியும் எடுக்கப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி பிரசாரம் செய்தார். ஆனால் அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் பிரதான துறையாக செயல்படும் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.

ஏற்கனவே ரெயில்வே அமைச்சகம் ஒப்புகொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதை வலியுறுத்தி முதல்கட்டமாக நாடு முழுவதும் கோட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story