சென்னை ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது


சென்னை ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2018 5:15 AM IST (Updated: 4 Oct 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராமாபுரத்தில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நேபாளத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், மவுண்ட்–பூந்தமல்லி சாலையில் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 1–ந்தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த 2 மர்மநபர்கள், இந்த வங்கியின் முன்பகுதியில் உள்ள அலாரம் வயரை துண்டித்து விட்டு, வங்கி கட்டிடத்தின் அருகில் உள்ள ஜன்னல் ஓரம் செல்லும் காட்சிகளை, மும்பையில் உள்ள இந்த வங்கியின் கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் கண்டனர்.

இதுபற்றி அவர்கள், அங்கிருந்தபடியே ராயலா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் மர்மநபர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

அங்கு சோதனை செய்தபோது மர்மநபர்கள் வங்கியில் கொள்ளையடிப்பதற்காக கியாஸ் சிலிண்டர் மற்றும் கட்டர்கள் கொண்டு வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மூலம் கொள்ளை தவிர்க்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் துணை கமி‌ஷனர் அரவிந்தன், உதவி கமி‌ஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் ஒரு வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் புகைப்படம் கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார், அந்த பகுதியில் இருந்த வடமாநில வாலிபர்களிடம் அந்த புகைப்படத்தை காண்பித்து விசாரணை செய்தனர்.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை செய்தனர். அதில், சென்னை அண்ணா நகரில் தங்கி வேலை செய்து வந்த கணேஷ் பொகட்டி(வயது 20), நரத் பொகட்டி(21), ஆகியோர்தான் இந்த வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஒரு புகைப்படம், இந்த வழக்கில் முக்கிய துருப்பு சீட்டாக அமைந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் நேபாளத்தை சேர்ந்தவர் போல் இருந்தார். சென்னை அண்ணா நகர் பகுதியில் அதிகளவில் கூர்க்காக்கள் வேலை செய்து வருவதால் அங்கு சென்று விசாரித்தோம்.

அப்போதுதான் நேபாளத்தை சேர்ந்த கணேஷ் பொகட்டி, நரத்பொகட்டி இருவரும் சிக்கினார்கள். கணேஷ் பொகட்டி, ஓட்டலிலும், நரத்பொகட்டி திருவொற்றியூரில் பானிபூரி கடையிலும் வேலை செய்து வந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் தங்கள் குடும்பத்தை பார்க்க நேபாளத்துக்கு சென்றிருந்தனர். அப்போது இவர்களது நண்பர் ஒருவர் வீடு, கார் என சகல வசதியுடன் இருப்பதை கண்டு அவரிடம் விவரம் கேட்டனர்.

அதற்கு அவர், நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வங்கியில் கொள்ளை அடித்தேன். அதில் செட்டில் ஆகிவிட்டேன். நீங்கள் ஏன் அங்கு சென்று கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று கூறி உள்ளார்.

இதையடுத்து மீண்டும் சென்னை வந்த இருவரும் இங்குள்ள தங்களது நண்பர்களை ஒன்று சேர்த்து கொள்ளை அடிப்பது குறித்து ஆலோசித்து உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்த வங்கிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை கேட்டு உள்ளனர். 2 நாள் கழித்து வரும்படி ஓட்டல் உரிமையாளர் கூறியதால் பஸ் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது இந்த வங்கி சாலையில் இருந்து சற்று உள்ளே தள்ளி இருப்பதால் இங்கு கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்து உள்ளனர். அதன்படி சம்பவத்தன்று சமையல் செய்யும் கியாஸ் சிலிண்டர் மற்றும் கட்டர்களை 6 பேர் கொண்டு வந்துள்ளனர். முதலில் அலாரம் இணைப்பை துண்டித்து உள்ளனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகளை மும்பையில் உள்ள வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் அங்கு சென்றதால், கொள்ளையர்கள் பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் கொண்டு வந்த சிலிண்டரால் இரும்பு கம்பிகளை வெல்டிங் வைத்து உடைக்க முடியாது. சூடுபடுத்த மட்டுமே முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

நண்பரின் ஆசைவார்த்தையை கேட்டு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்று தற்போது மாட்டிக்கொண்டனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகளான ஹரிஸ்பொகட்டி, அக்னி ஹட்கா என்ற சரத், லோகேஷ் ஹட்கா, பிஷ்ணு பொகட்டி ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story