மின் கம்பியில் லாரி உரசியதால் கன்டெய்னர் தீப்பிடித்து ரூ.1¾ கோடி தோல் ஆடைகள் நாசம்
மின் கம்பியில் லாரி உரசியதால் கன்டெய்னர் தீப்பிடித்து அதில் இருந்த ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள தோல் ஆடைகள் தீயில் எரிந்து நாசமானது.
பூந்தமல்லி,
சென்னை பெரம்பூர் எம்.எஸ்.எம். தெருவைச் சேர்ந்தவர் மகதிஅலி(வயது 50). மாங்காடு அடுத்த சிக்கராயபுரத்தில் இவருக்கு சொந்தமான தோல் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு மழை மற்றும் குளிர் காலங்களில் அணிந்து கொள்ளும் தோலால் ஆன ஆடைகள்(ஜர்கின்) உற்பத்தி செய்யப்பட்டு, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இங்கிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 6 டன் எடைகொண்ட தோல் ஆடைகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்னை துறைமுகம் நோக்கி சென்றது. கன்டெய்னர் லாரியை ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லக்கன்ரானா(வயது 24) என்பவர் ஓட்டிச்சென்றார்.
பூந்தமல்லி–குன்றத்தூர் சாலையில் குமணன்சாவடி அருகே கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் கன்டெய்னர் பெட்டி உரசியது. இதில் மின்கம்பி துண்டாகி கன்டெய்னரில் மின்சாரம் பாய்ந்தது.
இதனால் கன்டெய்னர் பெட்டிக்குள் இருந்த தோல் ஆடைகள் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் இதை கவனிக்காமல் லாரியை டிரைவர் தொடர்ந்து ஓட்டிச்சென்றார். தோல் ஆடை முழுவதும் தீ பரவியதால் கன்டெய்னர் பெட்டிக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது.
பூந்தமல்லி அருகே வந்தபோது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கன்டெய்னர் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு கன்டெய்னர் லாரி டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர், லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு பூந்தமல்லி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதற்குள் கன்டெய்னர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்துக்கு பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கன்டெய்னரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தோல் ஆடைகள் என்பதால் தொடர்ந்து புகைந்து கொண்டே இருந்தது. இதனால் தீயில் எரிந்தது மற்றும் எரியாத தோல் ஆடைகளை கன்டெய்னரில் இருந்து எடுத்து மற்றொரு லாரியில் ஏற்றி தொழிற்சாலைக்கே அனுப்பி வைத்தனர். அதன்பிறகு சுமார் அரை மணி நேரம் போராடி கன்டெய்னரில் எரிந்த தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் கன்டெய்னரில் இருந்த தோல் ஆடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 70 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.