சென்னையில் முதன் முறையாக மாநகர –அரசு விரைவு பஸ்கள் வரும் நேரத்தை அறிய புதிய ‘செயலி’


சென்னையில் முதன் முறையாக மாநகர –அரசு விரைவு பஸ்கள் வரும் நேரத்தை அறிய புதிய ‘செயலி’
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 3:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முதன் முறையாக மாநகர மற்றும் அரசு விரைவு பஸ்கள் குறிப்பிட்ட பஸ் நிறுத்தத்திற்கு வரும் நேரத்தை பயணிகள் அறிய புதிய ‘செயலி’ வசதியை வரும் 4 மாதத்தில் அறிமுகப்படுத்த அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் சுமார் 1½ லட்சம் பஸ் நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்காக 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளின் சேவையை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் புது, புது வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தற்போது சில நேரங்களில் பஸ் பயணிகள் பஸ் நிறுத்தங்களில் அதிக நேரம் பஸ்சுக்காக காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக குறித்த நேரத்தில் பஸ் வராததுடன், பஸ் பழுதாகி நிற்பது போன்ற காரணங்களால் உரிய நேரத்தில் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை பயணிகளுக்கு ஏற்படுகிறது.

இதனால் பயணிகள் மாற்று போக்குவரத்துகளான தனியார் டாக்சி மற்றும் ஆட்டோக்களை தேடி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து கழகம் புதிய ‘செயலி’ அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

சாலை போக்குவரத்து பயிற்சி நிலையம் இதுகுறித்து கள ஆய்வு செய்தது. அதில் அரசு பஸ்கள் அனைத்திலும் ‘ஜிப்’ ஒன்றை பொருத்தி, பயணிகளின் ஆண்டிராய்டு செல்போன் மூலம் புதிய ‘செயலி’யை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதன் மூலம் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிக்கு தாங்கள் பயணம் செய்யும் பஸ் எத்தனை மணிக்கு தாங்கள் நிற்கும் பஸ் நிறுத்தத்துக்கு வரும், தற்போது எங்கு வந்து கொண்டு இருக்கிறது அத்துடன், பஸ் ஏறிய உடன் நாம் இறங்கும் இடத்திற்கு எத்தனை மணி நேரத்தில் போய் சேர முடியும், போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் எவ்வளவு நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேரும் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.

இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், போக்குவரத்து கழகங்களுக்கும் வருவாய் அதிகம் கிடைக்கும் என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஒரே நேரத்தில் ஒரு இடத்திற்கு தொடர்ந்து 2 அல்லது 3 பஸ்கள் செல்வதையும் தடுத்து, உரிய நேரத்தில் பஸ்கள் செல்வதையும் அதிகாரிகள் கண்காணிக்க முடியும். அத்துடன் பஸ்களில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள்?, யார், யார் பயணம் செய்கிறார்கள்? என்ற தகவல்களையும் அதிகாரிகள் தெரிந்துகொள்ள முடியும்.

முதல்கட்டமாக சென்னை மாநகர பஸ்களிலும், எஸ்.இ.டி.சி. என்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் ஜிப்பை பொருத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரி உள்ளனர்.

இந்த வசதி இன்னும் 4 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story